நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 3 ஆயிரத்து 986 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் மட்டும் 1459 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 10 ஆயிரத்து 685 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  


தமிழகத்தின் பிற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சென்னைவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.




இதன்படி, சென்னையில் இன்று முதல் மீண்டும் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை முகாம் தொடங்கியுள்ளது. இதன்படி, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இன்று முதல் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.


இந்த பரிசோதனையின்போது வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலை, காய்ச்சல், இருமல், சளி ஏதேனும் இருக்கிறதா என்று கணக்கெடுக்க உள்ளனர். அவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படவுள்ளது. மேலும், முறையான சிகிச்சை எடுக்க உதவவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த காய்ச்சல் முகாம் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நடத்தப்படவுள்ளது.