தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு,  வரும் வெள்ளிக்கிழமை  இரவு பத்து மணிமுதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்தார்.  


தற்போது (ஏப்ரல் -20), புதுச்சேரியில் கொரோனா பரவலின் 7 நாட்கள் சராசரி எண்ணிக்கை 572-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த மார்ச் 14ம் தேதி வெறும் 23 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, புதுச்சேரியின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. முதல் அலையின் ஒரு நாள் உச்சத்தை புதுச்சேரி ஏற்கனவே கடந்துவிட்டது. தொற்று பரவலும் இதுவரை இல்லாத அளவில் உள்ளது. 



             


உதாரணமாக, ஏப்ரல் 17-ஆம் தேதி புதுச்சேரியில் புதிதாக 715 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் புதுச்சேரியின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும். கடந்தண்டு கொரோனா பெருந்தொற்று முதல் அலையின் போது 668  என்பதே ஒரு நாள் உச்சக்கட்ட பாதிப்பாக இருந்தது.


அதிகரிக்கும் சேதங்கள்: 


தினசரி பாதிப்பு 700, 800 என்ற அளவில் தானே உள்ளது? இதற்கெல்லாம் முழு ஊரடங்கா? ஏன் புதுச்சேரி கொரோனா பரவலை பெரிதாக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். ஆனால், பலதரப்பட்ட தரவுகளை ஒப்பீட்டு பார்க்கும் தமிகழத்தை விட புதுச்சேரியில் கொரோனா பரவலின் தாக்கங்கள் அதிகம் என்பதை உணரக்கூடும்.        உதாரணமாக, புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.6 அக உள்ளது. இறப்பு விகிதத்தில் இந்திய அளவிலான சராசரி 1. 2 அளவில் தான் உள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தின்  சராசரி இறப்பு விகிதம் 1.5 என்பதும் குறிப்பிடத்தக்கது.




 


மேலும், 10 லட்சம்  மக்கள் தொகையில் புதுச்சேரியில் 398 பேர்  கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்து வருகின்றனர். இது, மிகப்பெரிய அபாய சமிக்ஞையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கோவா (446) , டெல்லி (451 ) போன்ற 2  மாநிலங்களில் மட்டுமே இந்த எண்ணிக்கை புதுச்சேரியை விட அதிகமாக உள்ளது. அண்டை மாநிலமான தமிகத்தில் இந்த எண்ணிக்கை 154 ஆக உள்ளது. அதேபோன்று, 10 லட்சம் மக்கள் தொகையில் 24140.5 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில், இந்த எண்ணிக்கை 10269.8 ஆக உள்ளது. தேசிய மட்டத்தில்  10 லட்சம் மக்கள் தொகையில் 11316 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


குனமடைவோர் விகிதம் :


2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாண்டிச்சேரி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,247,953-ஆக உள்ளது. இதுவரை, அங்கு 36,935 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 35,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன், காரணமாக  குனமடைவோர் விகிதம் அங்கு 97.1-ஆக உள்ளது. தற்போது, கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 480-ஆக உள்ளது. டெல்லி (35,091), கோவா (1,327 ) போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஏன் முழுமையான ஊரடங்கு தேவை ?


கொரோனா பெருந்தொற்று தனது உச்சநிலையை (Peak Curve ) அடைந்தவுடன் அதன் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும் (Curve Flatten). மருத்துவ மேலாண்மை, கட்டுப்பாடுகள்,  நெறிமுறைகள் போன்றவைகளும் இதற்கு முக்கிய காரணிகளாக அமையும். தமிகத்தில் , கடந்த ஆண்டு முதல் அலையில்  கொரோனா  பாதிப்பு உச்சம் பெற்ற 60 நாட்களுக்குப் பிறகு  ( ஆகஸ்ட் 2 - அக்டோபர் 2 ) தான் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது.          





ஆனால், பாண்டிச்சேரியில் முதல் அலையில் ஒரு நாள் உச்சநிலை அடைந்த வெறும் 15 நாட்களுக்குப் பிறகு கொரோனா எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது (மேலே உள்ள விளக்கப்படத்தை காண்க). எனவே, கடந்த  ஏப்ரல் 17-ஆம் தேதி புதுச்சேரி அதிகப்பட்ச எண்ணிக்கையை பதி செய்தது. அடுத்த, 2 வாரங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடித்தல் முதல் அலையைப்போல விரைவில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும்.