திருவண்ணாமலை (Tiruvannamalai News) அதிமுக கவுன்சிலரின் வார்டுகளுக்கு எந்த நிதியும் ஒதுக்க கூடாது என நகர மன்ற தலைவரின் கணவர் மிரட்டல் விடுத்து அதிமுக கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் நகராட்சி அலுவலக வாயிலில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை:


திருவண்ணாமலையில் 39 வார்டுகள் உள்ளது. இதில் 33 திமுக உறுப்பினர்கள், 6 அதிமுக உறுப்பினர்கள் என 39 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர்மன்ற கூட்டம் சேர்மன் நிர்மலா தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் 39 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டிற்கு தேவையான குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை திமுக நகர மன்ற தலைவர் நிர்மலாவிடம் எடுத்துரைத்தனர்.


 




தர்ணா:


அப்போது நகர மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதிமுக வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு நகராட்சி சார்பில் தாங்கள் வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும், இதனால் வார்டில் உள்ள பொதுமக்கள் தங்களை மதிக்காமல் இருப்பதாகவும், நகராட்சி நிர்வாகம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி 24வது வார்டு உறுப்பினர் சாந்தி நகர மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


குறிப்பாக திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாகவும், தங்களது வார்டுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனவும், நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பை தேங்கி கிடப்பதாகவும், குப்பை அகற்ற ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை எனவும், அதேபோல் அரசு துப்புரவு  ஆய்வாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.




 


இதற்கு நகர் மன்ற தலைவர் எந்த பதிலும் சொல்லாமல் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். மேலும் நகர் மன்ற தலைவரின் கணவர் கார்த்தி வேல் மாறன் அதிமுக கவுன்சிலரின் ஆறு வார்டுகளுக்கு எந்த நிதியும் ஒதுக்க முடியாது என மிரட்டல் விடும் தொணியில் பேசினார்.


வெளிநடப்பு:


இதனை கண்டித்து அதிமுக வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து நகராட்சி அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக அதிமுக வார்டு உறுப்பினர்கள் நகர மன்ற தலைவரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் கூட்டத்தில் இருந்து எழுந்து நகர மன்ற தலைவர் திடீரென நிர்மலா வெளியே சென்றார். அப்போது அதில் குறிப்பிட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றப்பட்டது எனக்கூறி வேகமாக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திமுக. அதிமுக கவுன்சிலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.