Seeman: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சம்மன் அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் பற்றி தவறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அருந்ததியர் குறித்து சர்ச்சை கருத்து:


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் அருந்ததியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீமான் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன்படி, "ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அருந்ததியர் சமுதாயத்தினர் 6 சதவீதம் என்ற அளவில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் வாழும் அருந்ததியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். அருந்ததியர்கள் தெலுங்கு மொழியில் பேசுவதால், அவர்கள்  தமிழர்கள் அல்ல. விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள்" என்று பேசினார் சீமான். சீமானின் கருத்து அருந்ததியர் சமூகத்தினரைக் கொந்தளிக்க வைத்தது.  அதைத் தொடர்ந்து சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.


சம்மன் அளித்த போலீஸ்:


இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல்துறை சம்மன் அளித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் பற்றி தவறாக பேசியதாக தொரப்பட்ட வழக்குப்பதிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நெருக்கடியில் சீமான்:


பிரபல நடிகையான விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீமான் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தின் நடுவர் பவித்ரா முன்பாக ஆஜராகி இரண்டரை மணி நேரம் மேலாக 8 பக்கங்கள் அளவில் வாக்குமூலம் அளித்தார். இப்படி இருக்கும் நிலையில், தற்போது சீமானுக்கு சம்மன் அளித்தது கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.