தொடர் மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதேபோன்று கரூர் மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ளார்.


சிவகங்கையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியரே முடிவெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். அதாவது மழை பெய்யும் இடங்களில் விடுமுறை அளிக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பாக அந்தந்த கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 


தொடரும் மழை:


தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி,  தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, நேற்று இரவு தொடங்கி தற்போது வரை பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் விளைவாக திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றும் மழைக்கு வாய்ப்பு:


இதனிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.