தமிழ்நாட்டில் எப்போதுமே பாஜகவுக்கு இடம் இல்லை என்று மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உணர்வுபொங்கப் பேசியது பேசுபொருளாகி உள்ளது. ''தமிழக மக்கள் சுய மரியாதை, கலாச்சார உணர்வு, புரிதல் மிக்கவர்கள். அவர்களை என்றுமே பாஜக ஆள முடியாது'' என்றும் அவர் கூறியிருந்தார். 


இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதே கட்சியைச் சேர்ந்த குஷ்பு ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ''தமிழ்நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றனர். விரைவில் தமிழ் மண்ணையும் ஆள்வோம். இதை இந்த மண்ணின் மைந்தனாகச் சொல்கிறேன்'' என்று அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


''பக்கத்து மாநிலமான புதுச்சேரியை நாங்கள்தான் ஆள்கிறோம். இதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவு. பேசுவதற்கு முன் யோசியுங்கள்'' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.


இந்த சூழலில் பாஜகவின் பலம், தமிழ்நாட்டில் அதன் வெற்றி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.




நாட்டிலேயே பெரிய கட்சி


அடிப்படைக் கட்டமைப்புகள், சொத்துகள் ஆகியவை மூலம் நாட்டிலேயே முதல் பெரிய கட்சியாகவும் 2020-ல் இருந்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் பெரிய கட்சியாகவும் பாரதிய ஜனதா கட்சி உள்ளது. 


1951-ல் பாரதிய ஜன சங்கமாகத் தொடங்கப்பட்ட பாஜக, 1977 அவசர நிலைக்குப் பிறகு ஜனதா கட்சியாக மாறியது. 1977-ல் ஆட்சியைப் பிடித்த ஜனதா கட்சி, பின்பு கலைக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில், பாபர் மசூதி நிகழ்வுக்குப் பிறகு வட மாநிலங்களில் வேகமாக வளர்ந்து, 1996 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 13 நாட்களுக்கு நிலைத்தது. 


10 ஆண்டுகள் பிரதான எதிர்க்கட்சி


1998-ல் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அடல் பிஹாரி வாஜ்பாய் உருவாக்கினார். ஓராண்டு மட்டுமே ஆட்சி நீடித்தாலும், மீண்டும் வந்த தேர்தலில் ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தது. 2004 தேர்தலில் தோற்றாலும் 10 ஆண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக இருந்தது. அப்போதே மெல்ல மெல்ல நாடு முழுவதும் பல்வேறு வட மாநிலங்களில் தன்னுடைய இருப்பை உறுதி செ]ய்து, வாக்கு வங்கியை உயர்த்தியது.


2014 தேர்தலில் இருந்து பாஜக ஆட்சிக் கட்டிலில் உறுதியாக அமர்ந்தது. 2014-ல் 282 தொகுதிகளில் வெற்றிபெற்று 31.34% வாக்குகளைப் பெற்றது. 2019 தேர்தலில் அதைவிடவும் கூடுதலாக 303 தொகுதிகளில் வெற்றிபெற்று 37.46% வாக்குகளைப் பெற்றது பாஜக. திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் வெற்றியையும் தாண்டி, இந்த வாக்கு வங்கியைச் சொந்தமாக்கியது.






12 மாநிலங்களில் ஆட்சி


தற்போது 12 மாநிலங்களில் பாஜக தனியாக ஆள்கிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் தொடங்கி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் சிறிய மாநிலமான கோவா வரை 12 மாநிலங்களைக் கைவசம் வைத்துள்ளது பாஜக.


புதுச்சேரி, பிஹார், மேகாலயா, நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களில் ஆளும் கூட்டணியில் பாஜக உள்ளது. சிக்கிமில் இதேபோலக் கூட்டணியில் பங்கு வகித்தாலும் அங்கு பாஜகவுக்கு எந்த அமைச்சர் பதவியும் அளிக்கப்படவில்லை.


நாடு முழுவதும் அசுர பலமிக்க கட்சியாக வளர்ந்தாலும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. ஜம்மு காஷ்மீரிலும் கடந்த தேர்தலில் எந்த ஒரு இடமும் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை.  


தமிழகத்தில் பாஜகவின் முதல் வெற்றி 


சுதந்திரம் அடைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தமிழ்நாட்டில் கால் பதித்தது. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் சி.வேலாயுதன். மத்திய, மாநிலக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்ட நிலையில், பலமுனைப் போட்டிகளுக்கு மத்தியில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இந்து முன்னணி ஆதரவுடன் போட்டியிட்டு வேலாயுதன் இந்த வெற்றியைச் சுவைத்தார். தமிழ்நாட்டில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற முதல் எம்எல்ஏ இவர்தான்.




1998ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால் அந்தக் கூட்டணி ஓராண்டுதான் நீடித்தது. கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆட்சியையே கவிழ்த்தார் ஜெயலலிதா. அதன்பிறகு உயிருடன் இருக்கும்வரை அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே இல்லை.


திமுக கூட்டணியில் வெற்றி


2001 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக திமுக கூட்டணியில் சேர்ந்தது. அப்போது 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, காரைக்குடி, மயிலாப்பூர், மயிலாடுதுறை, தளி ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. ஹெச்.ராஜா, ஜெக.வீரபாண்டியன், கே.என்.லட்சுமணன், கே.வி.முரளிதரன் ஆகியோர் பாஜக எம்எல்ஏக்களாக பவனி வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற 2006, 2011, 2016 ஆகிய 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. அதேபோல ஒரு எம்எல்ஏ பதவியைக் கூடப் பெறவும் முடியவில்லை.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்தபிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோத்தது பாஜக. எனினும் தமிழ்நாட்டில் நிலவியதாகச் சொல்லப்பட்ட மோடி எதிர்ப்பலையால் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. 


2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல்


இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.36% வாக்குகளைப் பெற்றது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.63% வாக்குகளைப் பெற்றது. 


2021 சட்டப்பேரவைத் தேர்தல்


கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக போட்டியிட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக கேட்டுப் பெற்றது. 


தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட உயர் நட்சத்திரத் தலைவர்கள் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்தனர். நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் எம்.பி.க்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டனர். 


4 பேருக்கு வெற்றி; நட்சத்திரங்களுக்குத் தோல்வி


20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் 68,553  வாக்குகளுடன் 38.71 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியைத் தழுவினார். 34.38 சதவீத வாக்குகளைப் பெற்ற வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தோற்கடித்து கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். அதிகபட்சமாக நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி 48.21 சதவீத வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றார். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக சட்டப்பேரவைக்குள் 4 உறுப்பினர்களுடன் நுழைந்தது. 



இதில் குறைந்தபட்சமாக திருவண்ணாமலை தொகுதியில் எஸ்.தணிகைவேல் 20.69 சதவீத வாக்குகளைப் பெற்றார். காரைக்குடியில் எச்.ராஜா 25.59% வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோற்றார். நட்சத்திர வேட்பாளர்களான எல்.முருகன், குஷ்பு ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். 


தமிழ்நாட்டில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்ததைக் காட்டிலும், பாஜகவின் மொத்த வாக்கு வங்கி 2021 தேர்தலில் 2.62 சதவீதமாகக் குறைந்தது. எனினும் பாஜக முந்தைய தேர்தலில் 188 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன்மூலம் ஒட்டுமொத்த வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக பாஜக கூறியது. 


2022-ல் தனித்துப் போட்டி


இந்நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இட ஒதுக்கீட்டில் சமரசம் ஏற்படாததால் 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது பாஜக. மாநிலம் முழுவதும் பாஜக தொடர்ந்து வளர்ச்சி அடைந்துகொண்டே வருவதாகவும், இதன்மூலம் நிறையப் பேர் போட்டியிட விரும்புவதாகவும் காரணம் தெரிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. எனினும் அதிமுக கூட்டணியில் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.


பாஜக தன்னுடைய வழக்கமான இந்துத்துவ சித்தாந்தக் கொள்கைகளில் இருந்து சற்று விலகி, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றாற்போல் தங்களது வியூகங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டில் காலூன்றுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். இதை அவர்கள் புரிந்து செயல்பட்டால் மாற்றங்கள் நடக்கலாம்.


அரசியலில் எல்லாமே சாதாரணம்தானே..!