நீலகிரி மாவட்டத்தில் யானைகள் கூட்டமாக ரயில் தண்டவாளத்திற்கான தடுப்புகளைத் தாண்ட முயற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளதோடு, வன உயிர்ப் பாதுகாப்புக்கான குரலை முன்னெடுத்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடந்து, ரயில்வே துறை யானைகள் எளிதாக நடந்து செல்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டுள்ளது.
விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும், மனித விலங்கு மோதலைத் தடுப்பதற்காகவும் தடுப்புகள் நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் ஆகியவற்றிற்கு அருகிலும் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அருகில் இருந்த வனப்பகுதிக்குள் நுழைவதற்காக யானைகள் கூட்டமாகத் தடுமாறியுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யானைகளும் அதன் குட்டிகளும் ரயில் தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நடந்து சென்று, தடுப்புச் சுவரைப் பாதுகாப்பாக கடந்து செல்வதற்காக செல்லும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
யானைகள் நடந்து செல்லும் போது ரயில் எதுவும் வரவில்லை என்ற போதும், இந்த விலங்குகளின் நடமாட்டத்திற்குத் தடுப்புகள் எவ்வாறு ஆபத்தானவையாக மாறியிருக்கின்றன என்று சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் இந்த வீடியோ தனக்கு வலி தருவதாகவும் கூறிய சுப்ரியா சாஹூ, `வன உயிர்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்புகளை மேற்கொள்வதற்காக கட்டாய வழிமுறைகள் வெளியிடப்பட வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹுவின் பதிவில், பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, வன உயிர்களுக்கான பாதுகாப்புக்கு ஏற்ற பகுதிகள் உருவாக்க வேண்டும் எனவும் முன்வைத்துள்ளனர்.
இதன்பிறகு, ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ மற்றொரு பதிவில் வனப் பாதுகாப்பு அதிகாரிகளும், ரயில்வே துறையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவின் முயற்சிகளுக்கும், ரயில்வே துறை மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.