நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியான குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு ( Draupadi Murmu) இன்று (ஜூலை.25) பதவியேற்று கொண்டார். நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.


”நடந்து முடிந்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள உங்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். உங்களின் போற்றுதலுக்குரிய பொது வாழ்வும் அற்பணிப்புமிக்க மக்கள் பணியும் நாட்டையும் நாட்டு மக்களையும் மேம்படச் செய்யட்டும்’’ என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 



முன்னதாக பதவியேற்பின் போது திரௌபதி முர்முவுக்கு வழக்கமான 21 துப்பாக்கி குண்டுகள் முழக்க மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



  • நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவராக பதவிக்காலம் முடிவடையவுள்ள வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • இவர்களை தவிர, முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

  • பதவியேற்புக்கு முன்பாக, திரௌபதி முர்மு, காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், பதவிக்காலம் முடிவடைய உள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்முவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குச் சென்றனர்.

  • முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று திரௌபதி முர்மு, வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் விருந்தளித்தார். 

  • 64 வயதான திரெளபதி முர்மு, வியாழன் அன்று எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வரலாறு படைத்தார். முதல் பழங்குடியினராகவும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

  • முர்முவின் சொந்த ஊரான ஒடிசாவின் ராய்ராங்பூர் வியாழக்கிழமை முதல் திருவிழாக் கோலம் பூண்டது. அவரது பதவியேற்பு விழாவைக் கொண்டாட அவரது கிராமத்தில் உள்ள மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

  • 2015ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையும் முர்முவையே சேரும்.

  • ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்மு, பிஜு ஜனதா தளம், பாஜக ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு விகித்தார்.

  • ஒடிசா அரசில் போக்குவரத்து, வணிகம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு போன்ற அமைச்சகங்களை கையாண்ட பல்வேறு நிர்வாக அனுபவத்தைக் கொண்டவர் முர்மு.

  • கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முர்மு, பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவரானார்.

    மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


    ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


    பேஸ்புக் பக்கத்தில் தொடர


    ட்விட்டர் பக்கத்தில் தொடர.


    யூடியூபில் வீடியோக்களை காண.