இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் இந்தியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதல் முறையாக ஒலிம்பிக் டார்ச் ஓட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்றது. 


இந்நிலையில் இன்று காலை செஸ் ஒலிம்பியாட் டார்ச் கோயம்புத்தூர் வந்தடைந்தது. இதை கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின்னர் அரசு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த விழாவில் பிரதமர் மோடியின் படம் மற்றும் அவர் குறித்து பேச்சு எதுவும் இடம்பெறவில்லை என்று பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தி அந்த விழாவிலிருந்து பாதியில் வெளியேறியுள்ளனர். 


 






இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியின் படம் மற்றும் அவர் தொடர்பான குறிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வரும் 28ஆம் தேதி சென்னையில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 


பிரதமர் மோடி வருகை:


செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரமதர் மோடி, மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். 
 
தனி விமானம் மூலம் குஜராத்தில் இருந்து புறப்படும் மோடி, 28ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை வளாகத்தை சென்றடைகிறார். அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். வழிநெடுக பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.


பிரதமரின் சென்னை பயணத்தை முன்னிட்டு, 28, 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய - மாநில உளவு பிரிவு காவல்துறையினர், உள்ளூர் காவல்துறை அலுவலர்கள், ஆயுதப்படை காவல்துறையினர், தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறையினர் ஆகியோர் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.சென்னையில் 20,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண