காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. 36 ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடந்த வார்டுகளில் 31 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 32 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சையாக வெற்றி பெற்ற ஆறு பேரில் 16 ஆவது வார்டு உறுப்பினர் சாந்தி திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து திமுக கூட்டணி கவுன்சிலர்கள் பலம் 33ஆக அதிகரித்தது.


 



திமுக மேயர் வேட்பாளர் மகாலட்சுமி உடன் திமுக கவுன்சிலர்கள் 


இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமியும் துணை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனும் அறிவிக்கப்பட்டனர்.  மொத்தம் 50 வார்டுகளில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையோடு உள்ளதால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து திமுக கட்சிக்கு வந்த சோபன் குமார் என்பவர் திமுகவில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பதவி வகித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான இவர், இவரது மனைவி சூர்யாவை 8 ஆவது வார்டில் பெற்று வெற்றி பெற்றார்.


 



மேயருக்கு மனுத்தாக்கல் செய்துள்ள திமுக கவுன்சிலர் சூர்யா சோபன் குமார்


இவர் காஞ்சிபுரம் முதல் மேயர் பதவிக்காக கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளை தொடர்ச்சியாகச் சந்தித்து தன் மனைவிக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார் இந்நிலையில் தலைமை கழகம் 9வது வார்டில் போட்டியிட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமிக்கு மேயர் பதவி ஒதுக்கி திமுக வேட்பாளராக அறிவித்து இருந்ததற்கு சோபன் குமார் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  மேலும் மேயர் பதவிக்காக வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவான வெற்றி வேட்பாளர்கள் இடம் தனக்கு ஆதரவளிக்க கூறி பல லட்ச ரூபாய்க்கு மேல் பேரம் பேசி வருவதாகவும் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


இதேபோல் துணை மேயர் பதவியை பொருத்தவரை 33 இடங்களில் தனி பெரும்பான்மையாக இருக்க கூடிய திமுக வேட்பாளர்களை தவிர்த்து ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு துணை மேயர் பதவியை ஒதுக்கப்பட்டு இருப்பது திமுக வேட்பாளர்கள் இடையே மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் துணைமேயர் பதவிக்காக திமுகவினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது