தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலானது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்கவும், பால் விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு காலத்தில் 4,380 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடு வீடுடாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுகள் கொண்டு வர தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி - மீன் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அனுமதிக்கப்பட்ட நபரை தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும், மே 25ஆம் தேதி தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்து வரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்றும், தொழிற்சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலானதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடியது. வெளியூர் செல்லும் பேருந்துகள் நள்ளிரவுடன் நிறுத்தப்பட்டன.
முழு ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி
* மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
* பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
* பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்
* உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
* பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
* ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
* வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
* தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.