தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களை பிடித்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்த அனைத்து கட்சிகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, வி.சி.க., உள்பட கூட்டணி கட்சியிலும், அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலும் அந்தந்த கட்சியின் சட்டமன்ற தலைவர் யார் என்று ஏற்கனவே முடிவுசெய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் மட்டும் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டது. முதலில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக கு.செல்வப்பெருந்தகையை நியமித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பில்,” அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஈரோடு (கிழக்கு), ஊட்டி, விருத்தாச்சலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை மற்றும் விளவங்கோடு ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த முறை 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக கே.ஆர்.ராமசாமி பொறுப்பு வகித்தார். ஆனால், இந்த முறை சட்டமன்ற தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் மூத்த உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற விஜயதாரணி எம்.எல்.ஏ., பிரின்ஸ் உள்பட பலரும் போட்டியிட்டனர். இதன் காரணமாகவே, சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் இத்தனை நாட்களாக கடும் இழுபறி ஏற்பட்டது. இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற கு.செல்வப்பெருந்தகை சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். செல்வப்பெருந்தகை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.