குறுவை சாகுபடி பாதிப்பு:


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்காமல் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,560 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,514 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,004 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 33.58 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 9.02 டி.எம்.சி ஆகவும் உள்ளது.


தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் 5.75 லட்சம் ஏக்கரில் இலக்குகளை தாண்டி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் தொடந்து கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகள் தரப்பில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் முழு அளவில் பாய்ந்து கடைமடை வரை பயிர்களுக்கு சீராக சென்றடையும் என்று தெரிவித்தனர். போதிய அளவில் தண்ணீரின்றி குறுவை பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. 


இழப்பீடு அறிவிப்பு:


இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  குறுவை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், "தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு எதுவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.


ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணந்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏருப்பில் பயிரி நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கர்நாடக அணைகள் நிலவரம்:


கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 98.4 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 21.58 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,811 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,183 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 56 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 14.27 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 8,245 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.