பொங்கல் பண்டிகைக்கு கடவூர் மற்றும் தோகைமலை பகுதியில் மண்பானைகள் தயாரிக்கும் பணி


கரூர் மாவட்டம், கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய மிக்க பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்காக பல்வேறு ஆடம்பரமான பொருட்களை பெற்றுக் கொண்டாடினாலும் பெரும்பாலான இல்லங்களில் சாதாரணமாக மண்பானை இல்லாமல் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை.


 




 


தற்போது நாகரிகம் வளர தொடங்கிய பிறகு மண்பானை பயன்பாடுகள் குறைய தொடங்கியது. இதனால் மண்பானை செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இருந்தபோதும் பழமை வாய்ந்த அடையாளங்களை மறக்கக்கூடாது என்ற தற்போது உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் மண்பானையை பயன்படுத்துவதற்கு முன் வந்து உள்ளனர். முன்பு சாதாரணமாக வீட்டில் மண் பானைகள் புழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது, பொங்கல் விழாவிற்கு பயன்படுத்தப்படும் அடையாளமாக மாறிவிட்டது. இதே போல் காலப்போக்கில் வெவ்வேறு உலோகப் பானைகளில் பொங்கல் வைக்கும்  மண்பானைகளின் பழக்கங்கள் குறைந்துவிட்டது.


மண்பானைகளின் மருத்துவ குணங்களை தற்போது உள்ள மருத்துவர்கள் அறிந்து தெரிவித்து வந்தாலும் மண்பானைகளின் பயன்பாடுகள் இன்னும் அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கால் சொற்பமாக பயன்படுத்தி வந்த மண் பானை பயன்பாடுகள் மற்றும் கோவில் விழாவில் பயன்படுத்த மண் குதிரைகள், விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் தயாரிப்புகள் இல்லாமல் அதன் தொழில்கள் முற்றிலும் அழிந்து விட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மையமாகக் கொண்டு தற்போது மண்பானை செய்யும் தொழில்களை தொடங்கியுள்ளனர்.


கடந்த காலங்களில் மண்பானை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் தயாரித்த மண்பானைகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு கிராமங்கள் தோறும் விற்பனை செய்து வந்தனர். தற்போது இந்த நடைமுறை அழிந்துவிட்டது. இந்தியாவின் முகமாக தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக மண்பானைகள் செய்யும் தொழில் உயிர்பிடிக்க அனைவரும் மண்பானைகளை பயன்படுத்துவதை தொடங்க வேண்டும். இதற்கு தமிழக அரசும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றன. தற்போது தமிழர்களின் பாரம்பரியம் மிக்க பொங்கல் பண்டிகை இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பாரம்பரிய மிக்க மண்பானைகளை தயாரிக்கும் பணிகள் கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் மும்மரமாக நடந்து வருகிறது.




 


கரூரில் கரும்பு விற்பனை அமோகம்:


இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தை மாதம் 1ஆம் தேதி பொங்கல் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்புதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பினை விரும்பி சாப்பிட்டு வருவது உண்டு. மேலும் பொங்கல் பண்டிகை அன்று  மண்பானையில் பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள், கொத்து மற்றும் காய்கறிகளை  படையல் இட்டு அறுவடை செய்த நெற்கதிர்கள் மற்றும் கரும்பை வைத்தும் வீடுகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம், கடந்த ஆண்டு ஒரு கரும்பு ஜோடி 100, 150 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு கரும்பின்  விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கரும்பை வாங்கிச் செல்கின்றனர் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.