கரூரில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது. 


கரூரில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் டவுன் போலீஸ் எஸ்ஐ, பானுமதி உள்ளிட்ட போலீசார் நேற்று முன் தினம் ஐந்து சாலை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, லாட்டரி சீட்டுகளை விற்றதாக, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த ரூபன், கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த முருகேசன், ஆகிய இருவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். 


 


 




நடன கலைஞர் தற்கொலை. 


மாயனூர் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சினிமா நடன கலைஞரை சடலத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் எரியூட்டிய குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாயனூர் அருகே செங்கல் சமத்துவபரத்தை சேர்ந்த ராஜலிங்கம் மகன் கதிரேசன், சினிமா நடன கலைஞராக இருந்து வந்தார். கடந்த நான்காம் தேதி இரவு, தந்தையின் மளிகை கடையில், கதிரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, போலீசில் புகார் அளிக்காமல் சடலத்தை அவரது குடும்பத்தினர் எரியூட்டிவிட்டனர். இந்நிலையில் சேங்கல் வி.ஏ.ஓ சிவக்குமார் இது குறித்து மாயனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் கதிரேசனின் தந்தை ராஜலிங்கம், தாய் ரேணுகாதேவி அண்ணன் கார்த்திகேயன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 


 




நெடுஞ்சாலை மரத்தை வெட்டியவர் மீது புகார். 


க. பரமத்தி அருகே மரங்களை வெட்டிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். க. பரமத்தி அருகே காரு உடையாம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இரண்டு மரங்களை வெட்டியதாக, கரூர், கஸ்பா நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது தேசிய நெடுஞ்சாலை துறை துணை பொறியாளர் பாலசுப்ரமணியம் கா. பரமத்தி போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் கார்த்திக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


 




சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு. 


அரவக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா, இவர், நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ,17 வயது சிறுமியை கடந்த ஆறாம் தேதி, சாலப்பாளையம் பட்டாளம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அரவக்குறிச்சி குழந்தைகள் நல அலுவலர் பூரணம் கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது கரூர் நகர  மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  


 




தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. 


கரூரில் கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் சின்ன ஆண்டான் கோவில் திருப்பதி லே-அவுட் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் தினேஷ், கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தினேஷின் மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.