கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி.


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் செல்வதற்கு திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


 




கரூர் மாவட்டம், மாயனூர் அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து அரியலூர் பகுதிக்கு சாக்கு பை ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  மாடு வாங்க வந்த சரவணன், மாரியப்பன் இருவரும்  வாகனத்தில் உடல் மாற்றிக் கொண்டு சம்பவ இடத்தில் பலி. சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


 




கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


 


 




குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக  சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி.


 கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது. இன்று மதியம் இந்த ரயில்வே கேட் மீது லாரி மோதியுள்ளது. இதனால் கேட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதியம் 3.45 மணியளவில் திருச்சி கரூர் பயணிகள் ரயில் வந்ததையடுத்து கேட் மூடப்பட்டது.ரயில்வே கேட்டினை ரயில் கடந்து சென்றதும் கேட்டினை திறக்க முற்பட்டபோது லாரி மோதியதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கேட் திறக்கவில்லை. கேட் திறக்கப்படாததால்  சாலை இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


இதில் 108 ஆம்புலன்ஸ்  வாகனம், கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று பைக் மற்றும் பேருந்தில் வீடு திரும்பியவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதியுற்றனர்.  மேலும் பேருந்தில் வந்த பொதுமக்கள் கல்லூரி மாணவ,  மாணவிகள் நீண்ட நேரம் ஆகியும் கேட் திறக்கப்படாததால் நடந்தே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். ரயில்வே ஊழியர்கள் கேட்டில் ஏற்பட்ட பழுதினை சரி செய்த பின்னர் 2 மணி நேரத்திற்கு பிறகு  கேட் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரமாக குளித்தலை மணப்பாறை சாலையில் இரு புறங்களிலும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கேட் திறக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதால் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.