நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் மீதான இரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இந்த போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.  அதேசமயம் அந்நாட்டில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். போருக்கு முன்பாக சுமார் 8 ஆயிரம் பேர் நாடு திரும்பிய நிலையில், போருக்கு பின்னர் சுமார் 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போர் காரணமாக இந்திய மாணவர்கள் வெளியேறி வரும் நிலையில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்பவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 




கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமான பொறியியல் படித்து வருகின்றார். உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை ராணுவ பிரிவில் சாய்நிகேஷ் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. சிறு வயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக விண்ணப்பித்து இருந்தார். உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் அவர் சேர்க்கப்பட வில்லை. உக்ரைனின் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை ராணுவ படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில் சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாக போர் புரிந்து வருவது மத்திய, மாநில உளவுத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. போர் சூழலுக்கு இடையே சாய் நிகேஷ் தனது குடும்பத்தினர் உடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், தொடர்ந்து போரில் பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் வெளியேறி வரும் நிலையில், அந்நாட்டிற்காக கோவை இளைஞர் போரில் பங்கேற்று இருப்பது குறித்து உளவுத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் செய்திகளை அறிய ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண