தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக திகழும் கோயம்பத்தூரில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 3632 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நேற்றைய மொத்த பாதிப்புகளில் கோவையில் மட்டும் 10 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், 24 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 


மேலும், அம்மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது, 34,253 பேர்  கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11 சதவிகிதம் பேர் கோவையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், 714 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையிலும், 3772 பேர் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கையிலும், 2617 பேர் சாதாரண படுக்கையிலும் கொரோனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2106 பேர் பராமரிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


மாறாக, சென்னையில் தற்போது 47553 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில், 2206 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையிலும், 8866 பேர்  ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


பொதுவாக, கொரோனா நோயாளிகளில் 90 சதவீதம் பேர் நுரையீரல் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல. கொரோனா நோயாளிகளில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 23 சதவிகிதம் பேருக்கு நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில், இந்த எண்ணிக்கை 13.09 சதவிகிதமாக உள்ளது. 


கோயம்பத்தூர் முதல் அலை/இரண்டாம் அலை ஒப்பீடு: 


கொரோனா முதல் அலையில் கண்டறியப்பட்ட அதே போக்குதான்  கோவையில் இரண்டாவது அலையிலும் காணப்படுகிறது. உதாரணமாக, முதல் அலையின் போது, சென்னையில் ஜூன் 24 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட நாட்களில்    கொரோனா  பாதிப்பு உச்சநிலையை எட்டியது. அந்த நேரத்தில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் சொற்ப அளவில்தான் இருந்தன. கோவையில் கடந்தாண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தான் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. 




கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் ஆரம்பித்த கொரோனா இரண்டாவது அலையிலும் இதேபோன்ற போக்கு காணப்படுகிறது. சென்னையில், கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடைந்த பின்பு தான், கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகாரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் மே 12-ஆம் தேதி முதல் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. கோவையில், மே 24-ஆம் தேதியில் இருந்து அதிகரித்த கொரோனா, இந்த வார இறுதிக்குள் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




எனவே, கோவையின் தற்போது தினசரி அதிகரிப்பு முந்தைய அலையோடு ஒப்பிடும் வகையில்தான் உள்ளது. கோவையில், கொரோனா பாதிப்புகள் பெரிய முரண்பாடுகளை ஏற்படுத்தவில்லை என்பதும் விளங்குகிறது.