Stalin Letter: "இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்" ஸ்டாலின் மடல்...
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, ‘உங்களில் ஒருவன்’ எழுதும் தொடர் மடல். ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் என்று தான் தனது கடிதத்தை ஆரம்பித்திருக்கிறார் முதலமைச்சர்.
ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் - ஸ்டாலின்
இது பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிட மிருந்து பாதுகாக்கின்ற போராட்டம் என கூறியுள்ளார். தாய்மொழியைக் காலத்திற்கேற்ற அறிவியல்தொழில்நுட்பத் தன்மையுடன் வளர்த்தெடுக்கும் போராட்டம் என கூறியுள்ள அவர், 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம், அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்! என முழங்கியுள்ளார்.
இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள், நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று தான் உறுதி அளிப்பதாக கடிதத்தில் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.
"உயிர் அடங்கும் வரை தாய்மொழியை காப்பாற்றும் உணர்வு அடங்காது"
ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு என்றும், உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது என்று உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொண்டு, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்காமல், மத்திய பாஜக அரசு வஞ்சித்து வரும் போக்கை தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களும்கூட தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் என கூறியுள்ள அவர், கடந்த 21, 22 ஆகிய தேதிகளில்கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், பெற்றோர்- – ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய அரசு நமக்கு நிதி தர மறுப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, “10 ஆயிரம் கோடி தந்தாலும் இந்தியைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்” என உறுதியுடன் தெரிவித்ததாக எழுதியுள்ளார்.
இந்தி படிப்பதை தடுக்கவில்லை..திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் - ஸ்டாலின்
மேலும், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கூறியுள்ள அவர், ‘இந்தி படிக்காதே’ என்று யாரையும் தடுக்கவில்லை, ‘இந்தியை எங்கள் மீது திணிக்காதே!’ என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக இந்தி திணிப்பை ஏன் எதிர்க்கிறோம் என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளம் தலைமுறையினரும் புரிந்துகொள்வதற்கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன் எனவும் கூறி, முதல் கடிதத்தை நிறைவு செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.