ADMK: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
கோவை வடக்கு தொகுதி எம்.எல். ஏ., வீட்டில் நடைபெறும் சோதனையால், அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகாமாக சொத்து சேர்த்ததாக நிலுவையில் இருந்த வழக்கில், தற்போது சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி. தலைமையிலான 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் காலை 6.30 மணி முதல், இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு அதிமுக தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். அம்மன் அர்ஜுனன் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார்.
வழக்கு என்ன?
2016 முதல் 2022 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 71.19 சதவிகித சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து சேர்த்ததாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக வாங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வழக்கு தொடர்பாகவே தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள்:
அண்மையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ரஜேந்திர பாலாஜி மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முன்னதாக, அதிமுக பொதுச்செயாலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக எம்.எல். ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளிலும் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இத்தகைய சூழலில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் சோதனைகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.