தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இன்றைய தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நேர்காணல் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் ஆட்சி குறித்து அவர் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். “திராவிட மாடல் எனப்படும் ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும் தான். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சி” என ஆளுநர் தெரிவித்திருந்தார். இது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.


இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கழகத்தைத் திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். 


இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம்?. திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது. இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் 


திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. மே 7 ஆம் தேதி சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன். என்னுடன் கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி., பங்கேற்கிறார்.


கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் நாகர்கோயில் கிழக்குப் பகுதியிலும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி தேனியின் பெரியகுளம் நகரத்திலும், அமைச்சர் க.பொன்முடி கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், ஆ.ராசா எம்.பி., கோத்தகிரியிலும், அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., கொடுமுடி வடக்கு ஒன்றியத்திலும், கனிமொழி எம்.பி.,  தூத்துக்குடியிலும், இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் உரையற்ற இருக்கிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.