"பிரதமர்  பதவியை மறுத்தவர் சோனியா காந்தி”


சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ  மைதானத்தில் இன்று திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட மாநாட்டில்,  தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே என பல தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 


இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பெண் இனத்தின் எழுச்சியின் போல் திமுகவின் மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் மாநாடு போன்று இல்லாமல் இந்தியாவின் பெண்கள் மாநாடு போல் இருக்கிறது.  நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும் பொழுது தலைவராக மட்டுமல்ல, அண்ணனாக பெருமைப்படுகிறேன்.


தங்கை கனிமொழி தமிழ்நாட்டில் இந்திய சங்கமத்தை நடத்தி காட்டி உள்ளார். சோனியா காந்தியும் இளமை எழுச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிற பிரியா காந்தியும் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளது சிறப்பு தருகிறது. தனக்காக காத்திருந்த பிரதமர்  பதவியை மறுத்து, இந்திய அரசியல் வானில் ஒரு கம்பீர பெண்மணியாக நின்றவர் சோனியா காந்தி” என்றார்.


"மகளிர் இடஒதுக்கீடு  மசோதா பாஜகவின் சதி”


தொடர்ந்து பேசிய அவர், "பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து மக்களின் உரிமையும் பறிக்கப்பட்டு இருக்கிறது. பாஜகவை தோற்கடிக்க வேண்டியது இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை. பாஜக ஆட்சியில் மகளிர் உரிமை மட்டும் இன்றி, அனைத்து மக்களின் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலும் தோல்வி அடைய செய்ய வேண்டும்.  


எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மூலமே பாஜகவை வீழ்த்த முடியும்.  மக்களை ஏமாற்றுவதற்காக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது.  வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா செல்லும் என்று கூறி இருந்தால், அதை பாராட்டி இருப்பேன்.


உன்மையாக அக்கறையுடன் இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. மகளிரை வீட்டிலேயே முடக்கி வைக்க நினைக்கிறது. 33 சதவீத இட ஒதுக்கீட்டில் ஓபிசி சிறுபான்மையினருக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு  மசோதாவை பா.ஜ.க.வின் சதியாகவே பார்க்க வேண்டும்.


தமிழகத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலை வரும் என்று நினைக்கிறேன். தமிழகத்தின் உள்ளாட்சியில் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உள்ளதால் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலைவரும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.


”2024-க்கு பின் மோடி ஆட்சி இருக்காது" 


மேலும், ”சாதி, மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவது யார் என்பது நாட்டுக்கே தெரியும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி முறை, நாடாளுமன்றம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்கிற பாஜகவின் மோடி ஆட்சி, 2024ஆம் ஆண்டுக்கு பிறகு மத்தியில் இருக்கப் போவதில்லை.


சாதிவாரியான கணக்கெடுப்பு கேட்டால், மக்களைப் பிரிக்கப் பார்ப்பதாக மோடி கூறுகிறார். அனைத்து தரப்பினருக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சாதி வாரியான கணக்கெடுப்பை கேட்கிறோம். ராகுல் காந்தி இப்போது சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்” என்று முதல்வர் ஸ்டாலின பேசியுள்ளார்.