மொழி தெரியாமல் வழி தவறி கடலூர் வந்த வட மாநில மூதாட்டியை சமூக வலைதள உதவியுடன் சொந்த மாநிலம் அனுப்பிய காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்தன.
கடந்த 4ஆம் தேதி உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஆன்மீக சுற்றுலா வந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீண்டும் திரும்பி செல்லும் வழியில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா வந்த குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் இடம் தெரியாமல் இறங்கி உள்ளார்.
பின்னர் எங்கு செல்வது என தெரியாமலும் மொழி தெரியாததாலும் கடலூர் வெள்ளி கடற்கரை பகுதிக்குச் சென்று ஆதரவற்ற நிலையில் இருந்த அவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மீட்டு கடலூர் முதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்திருந்தனர்.
இந்த நிலையில், சில நாட்களாக மொழி தெரியாமல் விலாசம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததை தொடர்ந்து அவரது புகைப்படம் மற்றும் அவரைப் பற்றிய விவரங்கள் whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த மூதாட்டியின் விலாசம் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து பயணச் செலவுக்கான தொகையை கொடுத்து அவரின் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
மொழி தெரியாமல் கடலூர் வெள்ளி கடற்கரையில் இருந்த மூதாட்டியை சமூக வலைதள உதவியோடு உறவினர்களுடன் மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்ப உதவிய காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் பல பாராட்டு தெரிவித்தார்.