CM Stalin: தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி:
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று முடிந்தது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது. அதேபோல, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் கார், கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது.
"தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்”
மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடங்கி முதல் இடத்தை பிடித்த கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கும், காளைக்கும் கார் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல். ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.
"ஏறு தழுவுதல் அரங்கம் ஜன.24ல் திறப்பு”
புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க