மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மெரினா கடற்கரையில் அவர்களுக்கு என சிறப்பு பாதை அமைத்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.1.14 கோடி செலவில் பாபூல், சிவப்பு மராந்தி மற்றும் பிரேசிலிய மரங்களால் ஆன, சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான புதிய பாதை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது. விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் இருந்து கடற்கரை வரையில் 263 மீ நீளம் மற்றும் 3மீ அகலத்துடன் இந்த பாதை வடிவமைக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில், இந்த நடைபாதையை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திறந்துவைத்தார். இந்த திறப்பு விழாவின்போது அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நேரு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர். 


இதையடுத்து, சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி "Dream Come True" என்கிறார். ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார். 






முன்னதாக, கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட” என்று பதிவு செய்திருந்தார். 






தற்போது அந்த பதிவை ரீ-ட்வீட் செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின், சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.