சேலம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, தேவர் அரசு மேல்நிலைப் பள்ளி, வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளி, கோட்டக்கவுண்டம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, சகாதேவபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, செட்டிச்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளி, உலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. 



பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கைகள் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் தயார் செய்து மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். கடந்த மூன்று ஊதியக் குழுக்களில் உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் ரூ.500, ரூ.750 மற்றும் ரூ.2000 என தனி ஊதியமாக வழங்கப்பட்டது.


தற்போது வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ரூ.2000-த்திற்கு அகவிலைப்படி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பமா அல்லது மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமா என்று விருப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கும் வகையில் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.


பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணிக்காலத்தையும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் ஒத்தப்பணிக்காலமாகக்கருதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.



அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுடன் அரசுக்கு பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம் தற்போது மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் முதுகலை ஆசிரியர்களுக்கு கனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு வரை 5:2 என்று நடைமுறையில் இருந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக 7:2 என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்றார்.


மூன்று ஊதிய குழுக்களில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமறுத்தப்பட வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றார். அரசு பள்ளிகளின் மின் கட்டணத்தை தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.