மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு வருவாய்த்துறையின் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட உத்தரவு.
தமிழ்நாடு முதலமைச்சர் , மாணவ, மாணவியர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக, வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் அறிவுறுத்தி உள்ளார்கள்.
இச்சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாணவ மாணவியர் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த்துறையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதமின்றி வருவாய் வட்டாட்சியர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன்".
நேற்று 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் போது, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்பிப்பது கட்டாயம். இந்நிலையில் மாணவர்களுக்கு வருவாய்த்துறை வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. முதல்நாளில் 18,332 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள் http: //www.tngasa.in/ எனும் இணையதளம் வாயிலாக மே 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம்தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின், சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், வரும் நாட்களில் விண்ணப்பப் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Aavin Cow Milk : இன்று முதல் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும் பால்.. ஆவினின் புதிய அறிமுகம்..