இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  “பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.


பல்கலை. நிர்வாகத்திற்கு கண்டனம்


தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


பின்னனி என்ன?


மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் சென்றனர். அப்போது, ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள்,  மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருப்பதாக குற்றம்சாட்டினர். பேரணியின் போது பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற விளிம்புநிலை மக்களுக்காக போராடிய தலைவர்களின் படங்களுடன், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி ஷிவாஜியின் படம் சேதம் அடைந்தது.


ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல்:


இதற்கு சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற மாணவர் அமைப்பினர் தான் காரணம் என கூறி, அவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினரான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். ஒரு சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல வந்த, ஆம்புலன்ஸ் மீது கூட அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.