மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில்  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது ”ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல் இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வித்தியாசமாக உள்ளனர். ஆளுங் கட்சியினர் இதுவரை தொகுதிக்கு வந்தது இல்லை தற்போது அமைச்சர்கள் அதிக அளவில் இந்த தொகுதிக்கு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டாலும் தி.மு.க., அமைச்சர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.



 

ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.  புதிய கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு தருவது போல வாக்காளர்களை கவர்வதற்காக தி.மு.க., புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது. திருமங்கலம் ஃபார்முலா அரவக்குறிச்சி ஃபார்முலா தற்போது ஈரோடு கிழக்கு புதிய ஃபார்முலா கொண்டு வருகின்றனர். மக்களை கூண்டுகள் அடைப்பது போல் அடைத்து ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது வசதிக்கேற்ப உணவுகள் பணம் வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பணமழை பொழிகிறது. தேர்தல் ஆணையம் 14 இடங்களில் சீல் வைக்கின்றனர். ஒரு மணி நேரத்தில் தி.மு.கவினர் மற்ற இடங்களில் கூடாரங்கள் அமைத்து அங்கு சென்று செயல்படுகின்றனர். சீல் வைப்பது தேர்தல் ஆணையம் கண்துடைப்பு போல் நடத்துகிறது. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.



 

கமலஹாசன் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் நடிக்கிறார். படம் நடிப்பதை விட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள். அதனால் கால் சீட் இங்கு கொடுத்திருப்பார். கமலஹாசனை மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பது இல்லை. அவர் உலக நாயகன். நல்ல நடிகர் ஆகவே பார்க்கின்றனர். கமலஹாசனை மக்கள் பார்ப்பார்கள் அவருடைய பேச்சை கேட்டால் ஓட்டு போடுபவர்களும் போட மாட்டார்கள்.  கமலஹாசன் பேச தெரியாது. பேசினாலும் மக்களுக்கும் புரியாது. தி.மு.க., நேற்று வந்த கட்சி இல்லை ஆட்களை பார்த்து யாரை எப்படி ஆஃப் செய்ய வேண்டும் என்பது தெரியும். கமலஹாசனை எந்த வகையில் ஆப் செய்தார்கள் என தெரியவில்லை.



 

எங்களைப் பொருத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்த வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு ஆளுங்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்யும் செயலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.