தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி அவர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் பிறந்தார். என்னதான் முத்துராமலிங்க தேவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டாலும் அவர் அனைவருக்குமான தலைவராகவே வாழ்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் தேவர் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
குறிப்பாக தென்மாவட்டங்களில் இந்த விழா களைக்கட்டும். வயது வித்தியாசமில்லாமல் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மேள, தாளத்துடன் பொங்கலிட்டு, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இந்நிகழ்வில் அரசியல் தலைவர்களும் கட்சி பேதமின்றி பங்கேற்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு பசும்பொன்னில் நடைபெறும் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவர் சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பசும்பொன்னில் நடக்கும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் அவர், மதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாட்கள் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் முடி காணிக்கை, பால் குடம், வேல் குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் கமுதி முத்துராமலிங்க தேவர் சிலையில் இருந்து நினைவிடம் வரை ஜோதி கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அங்கு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இந்த விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் சாதி, சமய பாகுபாடின்றி கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.