தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் முதிர்வு தொகை பெறாதவர்கள் இன்றைக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 


முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 


தமிழக அரசால் கடந்த 1992-ம் ஆண்டிலேயே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் தொகை, முதலீட்டு தொகையாக சமூகநலத் துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை வழங்கப்படும்.


தகுதிகள் என்ன?



  •  இத்திட்டத்தின் பயனாளிகளுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 

  • விண்ணப்பிக்கும்போது குழந்தைகளின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.

  • குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

  • ஆண் குழந்தை இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்கவும் கூடாது.

  •  40 வயதுக்குள் பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்..


தேவைப்படும் ஆவணங்கள்


பெற்றோரின் ஆதார் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகலோடு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை.


விண்ணப்பிப்பது எப்படி?


சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இத்திட்டத்தில் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள், உரிய ஆவணங்களான, வைப்புநிதிப்பத்திரம் அசல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கிக்கணக்கு புத்தகம் நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) புகைப்படம் ஆகியவைகளுடன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (25.10.2023) கடைசி நாள். இ-சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலம.