வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. 


நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர். கட்சிகள் சார்பாகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும், அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் தேர்தல் ஆணையமும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.


அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 மாநில தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் இருந்து 40 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.