தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக இன்று திருநெல்வேலி மாவட்டத்திற்குச் செல்கிறார். இதனை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் நெல்லை பயணம்
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் திசையெங்கும் திமுக கொடிகளும், முதலமைச்சரை வரவேற்று பேனர்கள், போஸ்டர்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் அமர்க்களப்படுத்தியுள்ளனர். டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய இருநாட்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அம்மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக டிசம்பர் 20ஆம் தேதியான இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருநெல்வேலி செல்கிறார். அவருக்கு மாவட்ட எல்லையான கேடிசி நகர் பகுதியில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதனை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் அங்கிருந்து நான்கு வழி சாலையில் பயணித்து ரெட்டியார்பட்டி மலையை அடுத்துள்ள விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை யூனியன் முன்னாள் சேர்மனும், திமுக பாளையங்கோட்டை ஒன்றிய முன்னாள் செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியனின் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
அங்கிருந்து டக்கரம்மாள்புரத்திற்கு வரும் அவர் தரிசன பூமியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். இதன் பின்னர் இரவு வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
பொருநை அருங்காட்சியகம் திறப்பு
நாளை (டிசம்பர் 21) காலை 9:30 மணிக்கு ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வரும் அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.
இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது. மேலும் தற்காலிக கழிப்பறைகள் தொடங்கி மின்விசிறி அமைத்தல் வரை முன்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சீரமைக்கப்பட்டு சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சில முக்கிய முடிவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த முறை திருநெல்வேலியில் பாஜக வென்ற நிலையில் இம்முறை அத்தொகுதியை கைப்பற்ற திமுக மிக தீவிரமாக களம் கண்டுள்ளது. இதனால் மக்களுக்கான எதிர்கால திட்டங்கள் பற்றி அவர் அறிவிப்பார் என சொல்லப்படுகிறது.