ரோபோடிக் அறுவை சிகிச்சை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 4.5 ஆண்டுகளில் 20 ஆயிரம் இருதய இடையீட்டு சிகிச்சைகள் ( Interventional cardiology ) மற்றும் 500 Robotic அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது , அதற்கான பாராட்டு விழா சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றுது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் ;
கடந்த 2022 மார்ச் 15 - ம் தேதி மேம்படுத்தப்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறை தொடங்கி வைக்கப்பட்டது. 34.60 கோடி மதிப்பீட்டில் அந்த கருவியானது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி மூலம், அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, இறப்பை குடல் இறக்கம் அறுவை சிகிச்சைகள் போன்றவை 3 - டி பார்வையில், உடனுக்குடன் தெளிவாக தெரியும், துல்லியமாக தெரியும் என்கிற வகையில் அவற்றின் மூலம் இந்த அறுவை சிகிச்சைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
சிறிய அளவிலான தழும்புகள் மட்டுமே தெரிவதால் பயனாளிகள் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு சூழல் நிலவியது. பயிற்சி பெற்ற மருத்துவர்களை பயன்படுத்தி, ரோபோட்டி அறுவை சிகிச்சை மூலம் இங்கு பாராட்டுகளை பெற்றிருக்கக் கூடிய மருத்துவர்கள், திறந்து வைக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் 500 சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
20 லட்சம் ரூபாய் வரை செலவாகின்ற இந்த பயன், ஏழை எளிய மக்களுக்கு இன்றைக்கு அரசின் சார்பில் விலையில்லாமல் செய்யப்பட்டு மிகப் பெரிய அளவில் இந்த உயிரிழப்புகளை தடுக்கக் கூடிய வகையில் இந்த திட்டம் இங்கு தொடங்கப்பட்டதற்கு பிறகு 500 முதல் 600 சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்திருக்கிறது.
செவிலியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு ;
செவிலியர்களை அரசு புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் துளி கூட இல்லை. ஏறத்தாழ 8, 9 ஆண்டு காலமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பணிக்கு வரும் போது அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் அவர்கள் எதற்காக ஒப்புக் கொண்டு வருகிறார்கள் என்று சொன்னால் , இரண்டு வருடத்தில் அவர்கள் நிரந்தர பணியாளராக சேர உரிமை கொண்டாட முடியாது. காலி பணியிடங்கள் உருவாகுவதை பொருத்து அவர்களை பணியில் சேர்க்க முடியும் எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தான் உள்ளே வருகிறார்கள்.
காலி பணியிடங்களே இல்லாத சூழல்
2024 - ல் புதிதாக உருவான மருத்துவ கல்லூரிகள் 11 சேர்த்து 1694 செவிலியர்கள் நிரந்தரப் படுத்தப்பட்டுள்ளனர். 2025 இல் 502 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிகளுக்கு , காலி பணியிடங்கள் 169 அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து விட்டது. அவர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை இன்னும் இரு தினங்களில் டி.எம்.எஸ் வளாகத்தில் கொடுக்க இருக்கிறோம்.
இதுவரை 3783 பேருக்கு செவிலியர்களுக்கான பணி நிரந்தரம் செய்துள்ளோம். இன்னும் 8322 பேருக்கு காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டிய சூழலில் இருக்கிறது. அவர்களின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது. ஆனால் காலி பணியிடங்கள் உருவாக்கும் போது தான் அவர்களுக்கான இடங்களை நிரப்ப முடியும். காலிப் பணியிடங்களே இல்லாத ஒரு சூழல் என்பது உருவாகியுள்ளது.
யாரையும் இந்த அரசு விடாது
போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை, அதே நேரத்தில் துறை சார்பில் அவர்கள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது அந்த விதிமுறைகளை தெரிந்து கொண்டு பணிக்கு வர வேண்டும் என்பது தான் உண்மை. யாரையும் இந்த அரசு விட்டு விடாது, சீனியாரிட்டி பொறுத்து அவர்களுக்கான பணி நிரந்தரம் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் வந்த செவிலியர்களை ஒப்பந்த செவிலியர்கள் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர் கூட இந்த துறையில் நான் வேலை செய்தேன், பாதித்தேன் என்று சூழல் கடந்த 4.5 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். செவிலியர்கள் கோரிக்கையை நேரில் வந்தால் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் பேசினார்.