CM MK Stalin: திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல அறிவு இயக்கம் என கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று அதாவது ஜூலை 15-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில், “திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கம் என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கு சென்னை தலைநகர் என்றால், மதுரை கலைநகர் எனவும், கல்வியும் சுகாதாரமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு கண்கள் என பேசினார். 


மேலும் அந்த உரையில், “கடந்த மாதம் சென்னை கிண்டியில் கலைஞர் பெயரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது, ஒருமாத இடைவெளியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை, கல்வியும் சுகாதாரமும் தான் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு கண்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல் வேறு எங்கு நூலகம் அமைக்க முடியும். கலைஞர் நூலகம் மூலம் மதுரையில் அறிவுத் தீ பரவப்போகிறது. திராவிட இயக்கம் என்றாலே அறிவு இயக்கம் தான். திராவிட இயக்கம் என்றாலே அறிவுத் தீ; படித்தும் பேசியும் வளர்ந்தவர்கள்தான் திராவிட இயக்கத்தினர். திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல அறிவு இயக்கம். 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 680 கோடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.  பொதுப்பணிதுறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட நூலகம் உருவாக காரணமாக இருந்த அனைவரையும் பாராட்டுகிறேன். கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்” என பேசினார். 


3 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள்


கலைஞர் நூலகம் போட்டித் தேர்வாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 6 தளங்கள், 3 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் என மிகவும் பிரமாண்ட முறையில் இந்த நூலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பன்முக ஆற்றல் பெற்ற கலைஞரின் பெயரில் நூகலம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இந்த நூலகத்தை பயன்படுத்தி தங்களது பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த துறையில் நுழைந்தாலும் அதில் முதன்மையானவராக விளங்கியவர் கலைஞர். கால் பதித்த துறைகளில் எல்லாம் முதன்மையானவர் கலைஞர். கலைஞரின் படைப்புகளை வைத்து மட்டுமே தனி நூலகம் அமைக்க முடியும். தனி எழுதுகோல் படையையே வைத்திருந்தவர் கலைஞர்; அவரது படையினரே வாழயடி வாழையாக தமிழ்நாட்டை  வளர்த்து வருகின்றனர்” என முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.