விழுப்புரம்: விழுப்புரம் பாஜக தெற்கு மாவட்ட  தலைவர்  விஏடி கலிவரதனை நீக்ககோரி விழுப்புரம்  கட்சி தலைமை அலுவலகம் முன்பு பாஜகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தை கைவிடக்கோரி மாவட்ட பொருளாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மத்தியில் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  விஏடி கலிவரதன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்தாண்டு பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசி அடிக்கடி சர்சைக்குள்ளாவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் கடந்த ஆண்டு மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலேயே விழுப்புரம் மாவட்டம் பாஜகவை வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு மீண்டும் விஏடி கலிவரதன் தெற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். விஏடி கலிவரதன் பாஜக தெற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டதால் கட்சி நிர்வாகிகளுக்குள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனால் கட்சிக்குள் சலசலப்பு இருந்து வந்த நிலையில் மீண்டும் விஏடி கலிவரதன் மாவட்ட ஐடி விங் பிரிவு தலைவருடன் பேசும்போது, பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஒன்னுமே தெரியாது என்றும் தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி பரப்பரப்பினை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக கட்சி நிர்வாகிகள் சென்னை தலைமையிடத்திற்கு புகார்கள் தெரிவித்து தகாத வார்த்தைகளால் பேசுவதையும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதை கண்டித்தும் விழுப்புரம் எல்லிச்சத்திரம் சாலையிலுள்ள பாஜக அலுவலக வளாகத்தினுள் பாஜகவினர் தரையில் அமர்ந்து கடந்த 10 ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்திற்கு பிறகும் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காததால் இன்றும் பாஜக நிர்வாகிகள் விழுப்புரம் கட்சி தலைமை அலுவலகம் முன்பாக தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்த கூடாது என்பதால் வி ஏ டி கலிவரதன் கட்சி அலுவலகத்தை பூட்டி சென்றதால் கட்சி நிர்வாகிகள் மாவட்ட பொருளாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை கைவிடக்கோரி மாவட்ட பொருளாளர்  திடீரென கட்சி நிர்வாகிகள் மத்தியில் காலில் விழுந்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தவறு செய்தவர் மன்னிப்பு கேட்காமல் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் பாஜக நிர்வாகிகள் அவரிடம் வாக்கு வாதம் செய்தனர்.