முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடகோவை பகுதியில் காமராஜர் சிலைக்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கும் விழாவில்,  வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுட்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆட்சி. காமராஜர் அன்று செய்த செயலை பாஜக நினைவு கூறுகிறது. காங்கிரஸின் எமர்ஜென்சியால் காமராஜர் மன வேதனைப்பட்டு இறந்தார்.


தமிழகத்தின் கல்வி சூழலால் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோரின் வருமானத்தில் பெரும் செலவு செய்யும் சூழல் உள்ளது. காமராஜர் முயற்சியில் அஸ்திவாரம் நன்றாக உள்ளது. கல்வி சுமையாக குடும்பத்திற்கு மாறிவருகிறது. தமிழக அரசு நல்ல கல்வியை தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.


பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் தருவதாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். உதயநிதி ஸ்டாலின் பிரதமர் என்ன பேசினார் என்பதை முழுமையாக கேட்க வேண்டும். பிரதமர் மோடி சொன்னதை ஹிந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என தெரிவித்து விட்டு மாற்றிப் பேசுகின்றனர். மோடி பேசியதை உதயநிதி ஹிந்தி பண்டிட் வைத்து கேட்டுக் கொள்ள வேண்டும் என கேட்கிறேன்.


இரவு நேர பாடசாலை விஜய் துவங்கியது நல்ல விஷயம். கல்விக்காக செய்வதை வரவேற்கிறோம். என்ன மாதிரி செயல்படும் என்பதை பார்ப்போம். யார் சமூகத்திற்காக பங்களித்தாலும் பாராட்டுகிறேன். மக்கள் நீதி மய்யம் என்னை கண்டித்து போராட்டம் வைத்துள்ளனர். எம்.எல்.ஏ பணி என்பது ஒரு புறம். பணியைத் தாண்டி கூட தொகுதியில் வேலை செய்துள்ளேன். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது .அமலாக்கத் துறை நடவடிக்கை என்பது தொடரும். மருத்துவமனை விவரம் குறித்து மருத்துவர் கருத்து கேட்ட பின்பு தான் விசாரணை தொடரும்.


எதிர்க்கட்சிகளின் கூட்டணி அறிவிப்புகள் உறவு, நட்பு ஒருபோதும் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவதை தடுக்க முடியாது. இவர்கள் தேர்தல் என்று வரும்போது தான் சேர்கின்றனர். சட்டமன்றத்தில் வாக்களிப்பவர்கள் கூட நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும் பொழுது மோடிக்கு வாக்களிக்கிறார்கள். சந்திராயன் 3 இந்தியாவின் பெருமை. சர்வதேச அளவில் மாற்றம். சிறு சிறு நாடுகள் இந்தியாவை அணுகுகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். மிகப்பெரிய மார்க்கெட் இந்தியாவுக்கு உள்ளது.


தக்காளி விலை ஏறி போனதுக்கு மத்திய அமைச்சரை காரணம் காட்டுவது எப்படி பொருத்தமாக இருக்கும்? விவசாயிகள் விளைச்சலை உள்ளூர் அரசாங்கம் தான் கவனிக்க வேண்டும். விவசாயிகளுக்கு சரியான இன்புட் கொடுக்கவில்லை. குறைவு என்று வரும் பொழுது மத்திய அரசு என்கிறார்கள். பஞ்சு விலை உயர்வுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு ஏற்கனவே குறைத்துள்ளனர். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுள்ளேன். எங்களுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி கிடைக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.