சென்னை திருவல்லிக்கேணியில் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பொது மக்களிடம் பேசினார்.
அதில், “மாணவ மாணவிகள் கற்கும் கல்விதான் திருட முடியாத சொத்து. அதனால்தான், பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக மிக மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கல்விக்காக இந்த அரசு மிக மிக முக்கியத்துவத்தை தந்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவருடைய சிந்தனை நேர் கோட்டில் இருந்தால்தான் கல்வி நீரோடை சீராக செல்ல முடியும். அதில், எவர் ஒருவர் தடங்கல் போட்டாலும், கல்வியானது தடம் புரண்டிடும். உலகப் புகழ் பெற்ற கலீல் ஜிப்ரான், எழுதிய வரிகளைதான் பெற்றோர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
'உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது’
என்பதுதான் கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதை வரிகள். மிகப்பெரிய நீண்ட கவிதை அது. அதில் இருந்து சில கவிதைகளைதான் சுட்டி காட்டி இருக்கிறேன். உங்களுடைய குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதற்கு தடை போடாமல் உதவி செய்யுங்கள். வழி காட்டுங்கள். பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது.
பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்திய துணை கண்டத்திற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 36,895 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது” என முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
பிற முக்கியச் செய்திகள்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்