சென்னையில் முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,. "தொழில் தொடங்க உகந்த இடம் என்ற இடத்திற்கு தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றார்.


மேலும் பேசிய அவர், "புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க, ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொழில்துறையில் 13ஆவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வந்துள்ளோம். பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது.


அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலக அளவிலான மூதலீட்டாளர்கள் பங்கு பெற வேண்டும். மதுரை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் தொழில் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் புத்தொழில் நிறுவனம் தொடங்கினால் மானியம் அளிக்கப்படுகிறது" என்றார்.


இந்த மாநாட்டில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


2030-31ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக, அதாவது ரூ.78 லட்சம் கோடி பொருளாதாரமாக வளர்ச்சி அடைய செய்ய வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதை, மையப்படுத்தி அன்றாடம் காய்களை நகர்த்தி வருகிறார்.


இந்த இலக்கு பொருளாதார வளர்ச்சியடைய, உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகித்தால் மட்டுமே சாத்தியமாகும். தமிழ்நாடு அதற்குரிய வலுவான உற்பத்தி சூழல் அமைப்பினை கொண்டுள்ள மாநிலமாகவே திகழ்கிறது.


இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட, தொழில் புரிய உகந்த மாநிலங்களின் தரவரிசை பட்டியலே உறுதி செய்கிறது.


இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 301 தொழில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதை, மத்திய அரசு தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செய்த மதிப்பீட்டில் 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 14-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, இப்போது ஆந்திரா, குஜராத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 


 






இதற்காக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.


ரூ.78 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ரூ.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படவேண்டும். 46 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.