நான் முதல்வன் திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக அதன் முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


நான் முதல்வன்:


கடந்தாண்டு மார்ச் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 


கனவுத்திட்டம்:


இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் கருணாநிதிக்கும் பிடிக்கக்கூடிய திட்டம் தான் ‘நான் முதல்வன்’ திட்டம். இது என்னுடைய கனவு திட்டம். திமுக ஆட்சிக்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களும், துறைகளும் வளர்ந்து வருகிறது.மாணவர்கள், இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் உதவுகிறது. தமிழ்நாட்டில் புதிய கம்பெனிகள் தொடங்கினாலும்,  அதில் வேலை செய்ய திறமையான இளைஞர்கள் கிடைக்க கஷ்டமாக இருப்பதாக சொன்னார்கள். அதை மனதில் வைத்தே இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 


தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்து வகையிலும் திறமையானவர்கள். இத்திட்டம் 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி என் பிறந்தநாளில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டு இளைஞர்களை உலக அளவில் முதன்மையானவர்களாக கொண்டு வர வேண்டுமென்பது எனது தணியாத ஆசை. சில திட்டங்கள் மட்டும் தான் தலைமுறை, தலைமுறையாக பயன்படும். அதில் ‘நான் முதல்வன்’ திட்டம் ஒன்று. அறிவிப்பதோடு எந்த திட்டமும் முழுமை பெறாது. அதை கடைசி வரை நடத்தி காட்டுவதில் தான் வெற்றி இருக்கிறது என அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடம் சொல்பவன் நான். 


உதயநிதிக்கு பாராட்டு:


இத்திட்டம் ஓராண்டை நிறைவு செய்கிறது. இதற்கு காரணமான அமைச்சர் உதயநிதியை நான் பாராட்டுகிறேன். விளையாட்டு துறையைப் போல நான் முதல்வன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறார். இதற்கு உறுதுணையாக உள்ள இன்னசெண்ட் திவ்யா ஐஏஎஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தான் முதலில் திறன் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயம் செய்தோம். ஆனால் ஒரு வருடத்திலேயே 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சாதனை. 


இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது அடுத்த சாதனை. நான் முதல்வன் திட்டம் மூலமாக 445 பொறியியல் கல்லூரியில் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் 80.053 பொறியியல் பட்டதாரிகள் பயிற்சி பெற்று பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்தார்கள். இதில் 65,034 பேர் பணியிடம் பெற்றுள்ளார்கள். அதேபோல் 865 கலை, அறிவியல் கல்லூரிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது.


இதன்மூலம் 93,230 பேர் பயிற்சி பெற்று பணிகளுக்கு விண்ணபித்து இருந்தார்கள். இதில் 83,223 பேர் பணி நியமனம் பெற்றுள்ளார்கள். இத்திட்டத்தில் நடத்தப்பட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் 5,844 பொறியியல் மாணவர்கள், 20, 582 கலை, அறிவியல் மாணவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. இது இந்த திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி” என தெரிவித்துள்ளார்.