தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை இனி மாநிலமே உற்பத்தி செய்யும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.’நமக்கு நாமே’ என அவர் களமிறங்கியிருக்கும் இந்த திட்டம் இன்று நேற்று உருவானதல்ல. எடப்பாடி பழனிசாமியின் முந்தைய அமைச்சரவையிலேயே அதற்கான யோசனைகள் எழுந்தன. இருந்தும் அன்று எடப்பாடி கோட்டைவிட்டதை இன்று எட்டிப்பிடித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கொரோனா முதல் அலைக்காலத்திலேயே பொருளாதாரத்தின் மீதான கொரோனாவின் தாக்கத்தை ஆராய தமிழக அரசு கமிட்டி ஒன்றை நிறுவியது. இந்தியப் புள்ளியியல் கழகத் தலைவர் சி.ரங்கராஜன் அதற்குத் தலைமை வகித்தார். மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறையை வளர்ந்துவரும் துறையாகப் பரிந்துரைத்தது அவரது குழு. ஆனால் போதுமான ஆக்சிஜன் இருப்பு, மருத்துவமனைகள் விரிவாக்கம்- மேலும் தீவிரத்தன்மை தனிந்ததை எல்லாம் காரணம் காட்டி எடப்பாடி அரசு அந்தப் பரிந்துரையை ஓரங்கட்டியது.





அதிமுக அரசால் ஓரம்கட்டப்பட்ட பரிந்துரைகளைத்தான் தூசிதட்டி எடுத்து தற்போது தமிழ்நாட்டின் தேவைக்காக அதை செயலாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். வருகின்ற 31 மே வரை தனியாரிடமிருந்து இதற்கான விருப்பமனுக்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் இது நீண்டகாலத்துக்குப் பயனளிக்கக் கூடியது எனக் குறிப்பிட்டுள்ளது. இதில் தனியாரின் குறைந்தபட்ச முதலீடாக ஐம்பது கோடி ரூபாய் என வரையறை செய்துள்ளது. இது கொரோனா காலத்துக்காக உருவாக்கப்படும் திட்டம்  என்றாலும் வேறுபிற நோய்கட்டுப்பாட்டுக்கான திட்டமிடல்களும் வரவேற்கப்படுவதாக டிட்கோ அறிவித்துள்ளது. இதன் மூலம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நோ பால் என நினைத்து விலகிய பந்தில் சிக்ஸர் அடித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.