மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் தொடர்பாக போக்குவரத்துத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.


போக்குவரத்துறை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் கடந்த மே 7-ஆம் தேதி சாதாரண கட்டணம் வசூலிக்கும் மாநகர மற்றும் நகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி மே 8-ஆம் தேதி முதல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், பயணம் செய்யும் மகளிரிடம் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள்: -


1. பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்லவேண்டும்.


2. ஓட்டுநர் பேருந்தை, குறித்த பேருந்து நிலையத்தில் தான் நிறுத்தவேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ/தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.


3.நடத்துநர் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக்கூடாது.


4. வயது முதிர்ந்த மகளிருக்கு இருக்கையில் அமர உதவி புரியவேண்டும்.


5. பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.


6. பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.


7. பெண் பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை (signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்கவேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.






கடந்த 7-ஆம் தேதி ராஜ்பவனில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, தலைமைச்செயலகத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அரசு பணிகளை தொடங்கினார்.  அப்போது, 5 கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து இட்டார். முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்தாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவதற்கான கையெழுத்தை போட்டார். இதில், ரூ.2 ஆயிரம் வீதம் முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படுகிறது.




 


முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் ஐந்து கையெழுத்துகள்: 



 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும்.



 நகர சாதாரண பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாக பயணிக்க ஆணை.



 ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.



 தனியாரில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்.



புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை உருவாக்கி உத்தரவு.


இவற்றில், நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் இலவசமாக பயணிக்கலாம் என்ற உத்தரவு மறுநாளே அமலுக்கு வந்தது. முதல்வர் அறிவித்துள்ள இந்த திட்டம் மிகவும் உதவியாக உள்ளதாகவும், இதனால், தாங்கள் மாதத்திற்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை சேமிக்கலாம் என்று பேருந்தில் பயணம் செய்த நடுத்தர வர்க்கத்தினர், பணிக்கு செல்லும் பெண்கள் உள்பட ஏராளமான பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.