சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவை நிறைவு நாள் நிகழ்வுகள் தொடங்கிய போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர். அவருடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்துள்ளது. தலைவர் கலைஞர் நினைவிடம் மட்டுமல்ல, அவரை உருவாக்கிய, தாய் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. 


இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதுவும் நாங்கள் அச்சிடவில்லை. இதனை ஒரு விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நடத்தவே நாங்கள் விரும்பி முடிவெடுத்துள்ளோம். எனவே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமை கட்சி என எல்லா கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என பேரவை தலைவர் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாடு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 


கருணாநிதி நினைவிடம் 


 வயது முதிர்வு காரணமாக  கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார். அவரது உடல் சட்ட போராட்டத்துக்கு பிறகு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு பின்னால் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்தது. இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.


அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கருணாநிதி கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக  3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.