சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதில் பலதுறை சார்ந்த அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்த உள்ளார். 


கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பதவியேற்றார். தொடர்ந்து மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கிட்டதட்ட 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் அவ்வப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம்தோறும் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


அந்த வகையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் அவர் ஈடுபடுகிறார். 2 நாட்கள் இந்த ஆய்வு கூட்டம் நடைபெறும் நிலையில், இந்நிகழ்வானது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. 


இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இன்று (அக்டோபர் 17) நடக்கும் கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 18) வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. முன்னதாக நடைபெற்ற கூட்டங்களில் தவறு யார் செய்தாலும் பாரப்பட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு எல்லையாக உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: IAS Transfer: இரவோடு இரவாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு - 4 துறை செயலாளர்கள் உட்பட 7 பேர் மாற்றம்