அ.தி.மு.க.வின் அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் இன்று உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அ.தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவு செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டவர். அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பட்டித்தொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அ.தி.மு.க. இழந்திருப்பது பேரிழப்பாகும்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித்துறை அமைச்சராக பணியாற்றியவர். சாதாரணத் தொண்டர்கள் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாக பழகியவர். ஏழை-எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.க.விற்குள் இறுதிமூச்சு வரை திகழ்ந்த மதுசூதனன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், புரட்சித்தலைவர் காலம் தொட்டு கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட கழக மூத்த முன்னோடி, கழக அவைத்தலைவர் அருமை அண்ணன் மதுசூதனன் மறைவு செய்தியறிந்து ஆற்றொண்ணா பெருந்துயரும் சொல்லொண்ணா சோகமும் அடைந்தேன். மதுசூதனனின் மறைவு கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கே ஒரு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பல கட்சித் தலைவர்களும் மதுசூதனன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.