தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 10 வருடங்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இன்றோடு திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 






அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளிர்  என பலவகையான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆட்சி பொறுப்புக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


அதில்,  "இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!" மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்... "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!" எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலுன் என்னும் நான் உங்கள் நல்லாதாரவையும், நம்பிக்கையும் பெற்று நம்ம மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4வது ஆண்டில் மே 7 ஆம் தேதி அடியெடுத்து வைக்கிறேன், இந்த 3 ஆண்டுகாலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னன்னு தினந்தோறும் பயனடையும் மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.


ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என எங்களையெல்லாம் ஆளாக்கிய அன்பு தலைவர் கலைஞர் சொன்னார். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல் செயல் செயல் என நிரூபிச்சி காட்டியுள்ளேன். எப்போதும் நான் சொல்வது போல இது எனது அரசு அல்ல.. நமது அரசு.  அந்த வகையில் நமது அரசு 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும் மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன். ” என கூறி திட்டத்தால் பயனடைந்த மக்களின் கருத்துகளையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.