தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ சர்ச்சை குறித்த கேள்விக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் விளக்கமளித்துள்ளார். 


ஆடியோ சர்ச்சை


கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி ஆடியோ ஒன்று  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆடியோவில் ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலத்தில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்,  முதலமைச்சரின் மருமகனான சபரீசனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக கூறியது போன்ற உரையாடல்கள் இடம் பெற்றிருந்தது. 


 உடனடியாக இதுகுறித்து விளக்கம் கொடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘சம்பந்தப்பட்ட ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்றும், இது ஒரு மோசடி என்றும் கூறினார். மேலும் இப்படியான ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியானது. அதில் தன்னைப்பற்றி கடந்த 2 வருடங்களில் ஏராளமான அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளதாகவும், என்னை வில்லனாக காட்ட  முதலில் முயற்சி செய்தார்கள் எனவும் பிடிஆர் சரமாரியாக விமர்சித்திருந்தார். மேலும் என்னையும்  முதலமைச்சரையும் பிரிக்க நினைக்கும் யுக்தி வெற்றியடையாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


விளக்கம் கொடுத்த பிடிஆர்


தொடர்ந்து அடுத்த சில தினங்களில் 2வது ஆடியோ வெளியானது. இதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் முதல்வரின் மகனும், மருமகனும் தான் கட்சியே என்ற உரையாடல்கள் இருந்தது. உடனடியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர் இப்படி போலியான ஆடியோக்களை வெளியிட்டுள்ளனர்.


அடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் தொடர்பாக நான் பேசியதாக வெளியான ஆடியோக்கள் ஜோடிக்கப்பட்டவை. திமுக தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையாக இயங்கி வருகிறோம் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். 


முதலமைச்சர் பதிலடி 


இந்நிலையில் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பிடிஆர் ஆடியோ சர்ச்சை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ”ஏற்கனவே 2 முறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்து விட்டார். மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதுகுறித்து பேசி மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு நான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.