மாநிலம் முழுவதும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் இன்று அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.


முன்னதாக ஆட்சிப்‌ பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ விதி 110-ன்‌ கீழ்‌ அறிவிப்பு வெளியிட்டார்‌. அதன்படி, அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தை மதுரை, ஆதிமூலம்‌ மாநகராட்சி தொடக்கப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி தமிழ்நாடு முதலமைச்சர்‌ 15.9.2022 அன்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன்‌ உணவருந்தினார்‌.


என்ன உணவு?


திங்கள்‌ கிழமை - காய்கறி சாம்பாருடன்‌ கூடிய ரவா உப்புமா / சேமியா உப்புமா / அரிசி உப்புமா / கோதுமை ரவை உப்புமா; 
செவ்வாய்‌ கிழமை - காய்கறி சாம்பாருடன்‌ கூடிய ரவா காய்கறி கிச்சடி / சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி;


புதன்கிழமை - காய்கறி சாம்பாருடன்‌ கூடிய ரவா பொங்கல்‌ / வெண்‌ பொங்கல்‌; 
வியாழக்கிழமை - காய்கறி சாம்பாருடன்‌ கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா / ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா; 
வெள்ளிக்கிழமை - காய்கறி சாம்பாருடன்‌ கூடிய சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / ரவா காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி
ஆகியவை மாணவர்களுக்கு முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌.


ஊட்டச்சத்து உணவை வழங்க உறுதி


ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும்‌ காலை உணவுக்கான மூலப்‌ பொருட்களின்‌ அளவு 50 கிராம்‌ அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா. மேலும்‌, அந்தந்த இடங்களில்‌ விளையும்‌ சிறுதானியங்கள்‌ / சாம்பாருக்கான பருப்பு 15 கிராம்‌ மற்றும்‌ உள்ளூரில்‌ கிடைக்கக்கூடிய காய்கறிகள்‌, ஒரு வாரத்தில்‌ குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில்‌ கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால்‌ தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படும்‌.


இந்த நிலையில், முதலமைச்சரின்‌ காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைக்கும்‌ விதமாக திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌, 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ இன்று உணவு பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன்‌ கலந்துரையாடியவாறே உணவருந்தினார்‌.


அப்போது அருகில் அமர்ந்திருந்த மாணவியிடம் விளையாட்டாய் பேச ஆரம்பித்தார். அவர், ’நான் யாருன்னு தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பினார். சிறுமி வெட்கப்பட்டுக் கொண்டே, ’நீங்க முதலமைச்சர்’ என்று கூறினார். ’முதலமைச்சர் சரி.. என் பேரு என்னன்னு தெரியுமா?’ என்று கேட்க, சிறுமி, ’ம்ம்.. சிஎம்’ என்று கூறினார். 


’அது பதவி. பெயர் அல்ல. பெயர் தெரியுமா?’ என்று கேட்க, மாணவி வெட்கப்பட்டு சிரித்தார். முதல்வர் ஸ்டாலின் ’உனக்குத் தெரியுமா?’ என்று மாணவனை நோக்கித் திரும்பிக் கேட்டார்.  சிறுவன், ’தெரியும்... ஸ்டாலின்!’ என்று கூற, அவ்விடமே சிரிப்பலையால் மூழ்கியது.