அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


அதிமுக பொதுக்குழு கூட்டம்


சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அப்போது இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தவிர சில தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். 


இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான  பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி கூறி வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.   


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதேசமயம் உச்சநீதிமன்றம் தீர்ப்பில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தனியாக விசாரிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. 


தீர்மானங்கள் தொடர்பான வழக்கு 


முதலில் இந்த வழக்கை விசாரணையை மேற்கொண்ட தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் வழக்கு விசாரணை ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து, கடந்த ஜூன் 28ல் வழக்கு விசாரணைக்கு வந்த போது தெரிவித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டு ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்கள் மீது தடை விதிக்க முடியாது. ஒருவேளை தடை விதித்தால் அது கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பாக இருக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.