முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதல் டோஸ் தடுப்பூசிகளை கொடுக்குமாறு பிரதமரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தவேண்டும் என்று முதல்வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.


இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி என்பதன் அடிப்படயில் அதனை விரைந்து செயல்படுத்திட ஏதுவாக இந்த ஆண்டு இறுதிக்குள் 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பருவத்தே பயிர் செய் என்பதற்கேற்ப காலத்தின் அருமை கருதி எடுக்கப்பட்ட முடிவு. மத்திய அரசின் இந்த முடிவு பாராட்டுக்குரியது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு 37.5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை சீரம் நிறுவனத்திடமிருந்தும், 28.5 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்தும், ஆக மொத்தம் 66 கோடி தடுப்பூசிகளை ரூ.14,505 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக வந்துள்ள செய்தி மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தவிர, ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல் இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், 90 விழுக்காடு செயல் திறன் கொண்டுள்ளது என்றும், இந்தத் தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் தகவல் வந்துள்ள நிலையில் மேற்படி நிறுவனத்திடமிருந்து 30 கோடி கோர்பேவாக்ஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு ஒப்பந்தம் ஏற்படுத்தி, முன்பணமும் செலுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.




ஆக மொத்தம், இந்த ஆண்டு இறுதிக்குள் 96 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் கொரோனா நோய் தொற்றின் மூன்றாவது அலையை நிச்சயம் தடுத்து நிறுத்தும்.


மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சக இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி 18ந்தேதி காலை 7 மணி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 40,49,31,715 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் 1,93,84,576 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி. இது இந்திய மக்கள் தொகையில் 6.061 விழுக்காடு. 2011 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், இதுவரை செலுத்தப்பட்ட 40,49,3,715 தடுப்பூசிகளில் 2,45,41,911 தடுப்பூசிகள் அதாவது 6.061 விழுக்காடு, தமிழ்நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 1,93,84,576 தடுப்பூசிகள் தான் தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 4.787 விழுக்காடு தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டுள்ளன.  மக்கள் தொகை அடிப்படையில், 51,58,335 தடுப்பூசிகள் குறைவாக செலுத்தப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள 96 கோடி தடுப்பூசிகளில், தமிழ்நாட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் 6.061 விழுக்காடு தடுப்பூசிகள், அதாவது 5,81,85,000 தடுப்பூசிகள் மற்றும் ஏற்கெனவே குறைவாகப் பெற்ற 51,58,335 தடுப்பூசிகள் என மொத்தம் 6,33,43,935 தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கினை எய்த வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே முதல்வர் இதில் உடடினாயக தனி கவனம் செலுத்தி, புள்ளிவிவரங்களொடு பிரதமரிடம் நேரில் சென்று எடுத்துரைத்து, குறைந்தபட்சம் 2011ம் ஆண்டும் மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.